

அசாமின் இரு வேறு மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை தொடர் தாக்குதல் நடத்தினர். இதில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.
பலியானோரில் 21 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். மத்திய அரசு கூடுதல் துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுத்துள்ளது.
அங்கு மோசமான நிலை நிலவுவதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச எல்லையோர அசாம் மாவட்டங்களான சோனித்பூர் மற்றும் கோக்ரஜாரின் மக்கள் மீது (போடோலாந்து ஜனநாயக முன்னணி) என்று அழைக்கப்படும் போடோ தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்த தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 70 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதை அடுத்து பலி எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூவ தகவல் தெரியவராமல் உள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் தரூண் கோகாய் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களை நேரில் இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.
தாக்குதல் குறித்து அம்மாநில சட்டம் ஒழுங்கு ஆணையர் எஸ்.என். சிங் கூறும்போது, "இதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு போடோ தீவிரவாதிகள் ஒத்துழைக்கவில்லை. அதனைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மிகப் பெரியத் தாக்குதல் நடந்துள்ளது குறித்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் பிறகே விவரங்கள் குறித்து பேசமுடியும்" என்றார்.
தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்:
பிரதமர் மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "சோனித்பூர் மற்றும் கோக்ரஜாரில் அப்பாவி கிராம மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கோழைத்தனமானது. அனைவரது பிரார்த்தனை உயிரிழந்தவர்களுடன் இருக்கட்டும். இது குறித்து அசாம் முதல்வர் தருண் கோகாய் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளேன். ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைவார்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான தாக்குதலை எந்தவிதத்திலும் யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. மத்திய அரசு அசாம் நிலையை கண்காணித்து வருகிறது.
சம்பவம் நடந்த பகுதிக்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துவிட்டனர். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.