Last Updated : 25 Dec, 2014 07:15 PM

 

Published : 25 Dec 2014 07:15 PM
Last Updated : 25 Dec 2014 07:15 PM

ரயில்வே தனியார்மயம் இல்லை: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாகாது. இதுதொடர் பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை நல்லாட்சி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் நல்லாட்சி தினமான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சி களில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

4 ரயில்வே பல்கலை.கள்

அங்குள்ள டீசல் லோகோமோட் டிவ்ஸ் வொர்க் (டி.எல்.டபிள்யூ.) ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ரயில் இன்ஜின்களை பிரதமர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சிறு வயதில் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுள்ளேன். எனது வாழ்க்கை ரயில்வே துறையோடு பின்னிப் பிணைந்துள்ளது. நான் பிரதமராக பதவியேற்ற பிறகு ரயி்ல்வே துறையை உலகத் தரத்துக்கு மேம்படுத்த சிந்தித்து செயல்பட்டு வருகிறேன்.

தற்போது இந்தியாவில் தயாரிக் கப்படும் ரயில் இன்ஜின்களில் 96 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. 4 சதவீத பாகங்கள் மட்டும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 96 சதவீ தத்தை உள்நாட்டில் உற்பத்தி செய் யும்போது அந்த 4 சதவீதத்தையும் ஏன் உள்நாட்டில் தயாரிக்க முடியாது?

அதற்கான முயற்சிகளில் ரயில்வே துறை வல்லுநர்கள் அக்கறை செலுத்த வேண்டும். ரயில்வே துறையை மேம்படுத்த நாடு முழுவதும் 4 இடங்களில் ரயில்வே பல்கலைக்கழகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

ரயில்வே தனியார்மயமாகாது

ரயில்வே துறை என்பது வெறும் போக்குவரத்து மட்டும் அல்ல. அது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு. ரயில்வேயை நாம் முறையாக பயன்படுத்தினால் நமது கிராமங் களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

அண்மைகாலமாக ரயில்வே துறை தனியார்மயமாகிறது என்று தவறான தகவல்கள் பரவி வருகின் றன. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப் படாது என்று உறுதியாகக் கூறு கிறேன்.

ரயில்வேயை போன்று பாது காப்புத் துறையில் நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்யும் அளவுக்கு தன்னிறைவை எட்ட வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

சிறந்த ஆசிரியர்கள் தேவை

பனாரஸ் இந்து கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு நல்லாட்சி அவசியம். அந்த கொள்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை நடத்தி வருகிறது. மத்திய அரசில் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இ-சேவை திட்டம் படிப்படியாக நாடு முழு வதும் விரிவுபடுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி இணையதளங் கள் மூலமாக அரசின் சேவைகள் மக்களை நேரடியாகச் சென்றடை கின்றன.

நான் வாக்குறுதி அளித்தபடி நல்லாட்சியை வழங்குவேன். மக் களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். தொழில்நுட்பத் தின் மூலம் மக்களையும் அரசையும் இணைத்து வழிநடத்துவேன்.

இது அறிவு, ஞானத்தின் நூற்றாண்டு. ரோபோ போல மாணவர்களை உருவாக்குவ தாக நமது கல்வி முறை இருக்கக்கூடாது. அவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க வேண்டும்.

சிறந்த மாணவர்களை உரு வாக்க மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை. ஆசிரியராக விரும்பும் ஒரு மாணவனுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவனை எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஆசிரியராக மாற்ற முடியும்.

பெண் சிசுக் கொலை மாபாதகம்

ராணி லட்சுமிபாய் பிறந்த மண்ணில் பெண் சிசுக் கொலை தொடர்வது வேதனை அளிக்கிறது. பெண் சிசுக் கொலை மாபாதக செயல் ஆகும். இந்த சமூக அநீதியை தடுத்து நிறுத்த போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

நமது வலிமை நமது கலாச் சாரத்தில் அடங்கியுள்ளது. நான் பிரதமராகப் பதவியேற்று 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அந்த அனுபவத்தில் சொல்கி றேன். இந்தியாவை தற்போது உலகமே உற்று நோக்கிக் கொண் டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்று பட்டு உழைக்க வேண்டும். அப் போதுதான் நமது கனவுகள் மெய்ப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து

அசி காட் படித்துறையில் நடை பெற்ற தூய்மை இந்தியா திட்ட விழாவில் மோடி பேசியதாவது:

நான் கடந்த நவம்பரில் அசி காட் படித்துறைக்கு வந்தேன். அப்போது இந்த படித்துறை தூய்மையாக்கப்படும் என்று உறுதியளித்தேன். அதன்படி இப் போது படித்துறை தூய்மையாக காட்சியளிக்கிறது.

நாகாலாந்து ஆளுநர் பி.பி. ஆச்சார்யா, கிரண் பேடி, சோனால் மன்சிங், கபில் சர்மா, சவுரவ் கங்குலி, அருண் புரி, ராமோஜி ராவ் மற்றும் மும்பை டப்பாவாலாக்களும் தூய்மை இந்தியா திட்டப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள உள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோல் இந்த நாள் மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் ஆகும். அவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்து கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x