

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்புக்கு இந்தியா நேற்று தடை விதித்தது. இதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
இந்தியாவில் இருந்து இதுவரை 4 பேர் மட்டுமே ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும், இவர்களில் ஒருவர் நாடு திரும்பியதும், கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஐ.எஸ். செயல்பாடுகள் இல்லை என்பதாலும் இராக்கில் ஐ.எஸ். வசமிருப்பதாக கருதப்படும் இந்தியத் தொழிலாளர்கள் 39 பேரை மீட்கவேண்டும் என்பதாலும் இந்தியா இதுவரை ஐ.எஸ். மீது தடை விதிக்காமல் இருந்தது.
இவ்வாறு தடை விதிக்கும்போது, இந்தியாவில் அவர்களின் அனுதாபிகள் ரகசியமாக செயல்படத் தொடங்கினால் அவர்களை பிடிப்பது கடினம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, “பிற நாடுகளில் ஐ.எஸ். செயல்பாடுகளை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். இந்தியாவில் ஐ.எஸ். செயல்பாடுகளை முடக்க விரும்புகிறோம். இதில் முதல்கட்டமாக அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளோம்” என்றார்.