

பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்து மடங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டபேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது இந்து மடங்களை ஒழுங்கமைக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்து மதத்தின் அதிகாரத்தை வரையறை செய்யவும் கட்டுப்படுத்தவும் விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா அறிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு பாஜக, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்ட திருத்தத்தையும், புதிதாகக் கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டத்தையும் ரத்து செய்யாவிடில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக பாஜகவின் தேசிய துணைத் தலைவர் எடியூரப்பா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா முழுவதும் உள்ள இந்து மடாதிபதிகளை சந்தித்து அரசின் முடிவை எதிர்க்குமாறு வலியுறுத்தினர். எனவே கர்நாடகத்தின் மூத்த மடாதிபதி சிவகுமார சுவாமி உள்ளிட்ட பலர் இந்த சட்டம், இந்து மடாதிபதிகளுக்கும் மக்களுக்கும் எதிரானது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் முதல்வர் சித்தராமையா அதிர்ச்சி அடைந்தார். இந்து மடங்களை ஒழுங்கமைக்கும் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்வது குறித்து சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.
சட்டத் திருத்தம் ரத்து?
சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
குற்றச் செயல்களில் ஈடுபடும் மடாதிபதிகள் மீதும் பொதுமக்களின் சொத்துக்களை அபகரிக்கும் மடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சரியான சட்டம் தேவை. மேலும் வரைமுறை இல்லாமல் கோடிக்கணக்கான நிதியை பயன்படுத்தும் மடங்களை அரசு கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தனர். இதற்காகவே மடங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும், மடங்களை ஒழுங்கமைக் கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற் றப்பட்டது. தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றவும் அரசு தயாராக இருந்தது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக அந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். எனவே மடங்களை கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தத்தையும் புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டத்தையும் ரத்து செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.