ஆந்திரா, தெலங்கானாவில் பேனர்கள், சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆந்திரா, தெலங்கானாவில் பேனர்கள், சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்சித் தலைவர்களின் சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அம்மாநில அரசுகளுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சோஷியல் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பு தனது மனுவில், ‘ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், ஃபிளெக்ஸ் போர்டுகள், சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன’ என்று கூறியிருந்தது.

ஹைதராபாத் நகரில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட பேனர்கள், கட்சித் தலைவர்களின் சிலைகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது “மனுதாரர் கூறுவது போன்று ஹைதராபாத்தில் மட்டுமல்லாது தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் ஏராளமான கட்-அவுட்கள், பேனர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இரு மாநிலங்களிலும் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் இதுபோன்று அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இவ்விரு மாநிலங்களிலும் சட்டவிரோத பேனர்கள், சிலைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in