பாஜக எம்எல்ஏ ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கடும் அமளி

பாஜக எம்எல்ஏ ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கடும் அமளி
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகா வியில் உள்ள சுவர்ண விதான‌ சவுதாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, அவுராத் தொகுதி பாஜக‌ எம்எல்ஏ பிரபு சவாண் தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்தார். ஒரு பிரபல அரசியல் தலைவர் மகளின் புகைப்படத்தை மோசமான நோக்கில் ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தார். அதனை, கன்னட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தன.

இந்நிலையில் நேற்று அவை தொடங்கியதும் எம்எல்ஏ பிரபு சவாணைக் கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சி எம்எல்ஏக்கள் கூச்சல் எழுப்பினர். அவரை இடைநீக்கம் செய்யக்கோரியும், சவாண் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடும் நடவடிக்கை தேவை

கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா பேசும்போது, “பாஜக எம்எல்ஏ பிரபு சவாணின் செயலை மன்னிக்கவே முடியாது. கர்நாடக சட்டப்பேரவைக்கும், மக்களுக்கும் தீராத‌ அவமானத்தை ஏற்படுத்திய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த பாஜக ஆட்சியில் சட்டப் பேரவையில் ஆபாசப்பட‌ம் பார்த்த லட்சுமண் சவுதி, டி.சி.பட்டீல், கிருஷ்ண பாலிமர் ஆகிய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல பிரபு சவாணும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாஜகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவைக்குள் செல்போனைக் கொண்டு வருவதற்கு தடைவிதிப்பது குறித்து முடிவெடுக்கப்ப‌டும் “என்றார்.

இதைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போது, “எங்களுடைய உறுப்பினர் ஆபாசப்படம் பார்க்கவில்லை.ஏதேச்சையாக தனது செல்போ னில் உள்ள படங்களை மட்டுமே பார்த்துள்ளார். இதனை எதிர்க் கட்சிகள் பெரிதுபடுத்தக்கூடாது'' என்றார்.

பாஜக எம்எல்ஏ பிரபு சவாண் பேசும்போது,''சட்டப்பேரவையில் செல்போனை உபயோகித்தது தவறு தான். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என பலருடைய ப‌டங்களை பார்த்தேன். நான் பார்த்த படங்களை பசவனகுடி தொகுதி பாஜக எம்எல்ஏ ரவி சுப்பிரமணியிடமும் காட்டினேன்.

அரசியல் தலைவரின் மகள் படத்திற்கு கீழே ஒரு வாசகம் இருந்தது. அதைத்தான் `ஜூம்' செய்து பார்த்தேன். இருப்பினும் சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற போது அதுபோன்று பார்த்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தி, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in