Published : 14 Apr 2014 08:16 AM
Last Updated : 14 Apr 2014 08:16 AM

பலவீனமான பிரதமரா மன்மோகன் சிங்?- சஞ்சய பாருவின் புத்தகம் அடிப்படை ஆதாரமற்றது: பிரதமர் அலுவலகம் அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சிக்காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் என சஞ்சய பாரு தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது அடிப்படை ஆதாரமற்றது மற்றும் விஷமத்தனமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக (2004-08) இருந்த சஞ்சய பாரு ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்- தி மேக்கிங் அண்ட் அன்மேக் கிங் ஆப் மன்மோகன் சிங்’என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ‘ஐ.மு. கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதிகாரம் இல்லை. பிரதமர் அலுவலகத்துக்கும் அமைச்சரவைக்குமான முக்கிய நியமனங்களை ‘சோனியா தான் தீர்மானித்தார்’. கட்சிக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்று பிரதமர் என்னிடம் கூறினார்’.

‘2009 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தானே காரணம் என்ற நினைப்பை வளர்த்துக் கொண்டார் மன்மோகன் சிங். அது அவர் செய்த பெரிய தவறு. ஆனால் சில வாரங்களில் அவரது அதிகாரம் குறைக்கப்பட்டது. தான் விரும்பியவர்களை அமைச்சர்களாக கொண்டு வரலாம் என அவர் நினைத்திருந்தார். அந்த நினைப்பை சோனியா முளையிலேயே கிள்ளி எறிந்தார். மன்மோகன் சிங்கை கலந்தாலோ சிக்காமலே பிரணாப் முகர்ஜிக்கு சோனியா காந்தி நிதி இலாகா கொடுத்தார்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பாரு எழுதிய புத்தகம் அடிப்படை ஆதாரமற்றது எனவும், விஷமத்தனமானது எனவும் பிரதமர் அலுவலகம் தெரி வித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தின் எந்த கோப்பும், சோனியாவிடம் காட்டி ஒப்புதல் பெறப்படவில்லை என பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் பச்சவுரி தெரிவித்துள்ளார்.

பாஜக தாக்கு

சஞ்சய பாரு-வின் புத்தகத்தின் மூலம் ‘மன்மோகன் பலவீனமான பிரதமர்’ என்ற கூற்று மெய்ப்பிக் கப்பட்டிருக்கிறது என்று பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, “மன்மோகன் பலவீனமான பிரதமர் என்பதற்கான அதிகாரப்பூர்வ சாட்சிதான் பாரு-வின் புத்தகம்” எனத் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி, “பழங்கால கம்யூனிஸ அரசாங்கத்தைப் போல, கட்சித் தலைவர் வைப்பதுதான் நாட்டின் சட்டமாக உள்ளது. சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்போல இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x