

மதமாற்ற விவகாரம் குறித்து வரும் 17-ம் தேதி மாநிலங்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.
மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும் உ.பி.யின் ஆக்ராவில் நடைபெற்ற மதமாற்ற விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலை வர் ஆனந்த் சர்மா இந்த விவ காரத்தை எழுப்ப முயன்றபோது அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதிக்க வில்லை.
அப்போது மத்திய சிறுபான்மை யினர் நலத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, “இந்த விவ காரத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது.
இது தொடர்பாக கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ் களுக்கு வரும் 17-ல் விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண் டுள்ளது” என்றார்.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தள கட்சியின் உறுப்பினர் கே.சி.தியாகி கூறும்போது, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25-ன்படி, ஒவ்வொருவருக்கும் தனது மதத்தை ஏற்று, பூஜைகள் செய்ய உரிமை உள்ளது.
இதை மீறும் வகையில், மசூதிகளில் இருக்கும் ஒலிப்பெருக்கிகளின் மைக்குகள் அகற்றப்பட வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதைப் பற்றியும் விவாதிக்க வேண்டும்” எனக் கோரினார்.
கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களுடன் இந்தப் பிரச்சினையை ஒப்பிட்டுப் பேச தியாகி முயன்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த பி.ஜே.குரியன், இருவேறு விஷயங்களான அவற்றை ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து பேசக் கூடாது எனக் கண்டித்தார்.