Published : 07 Dec 2014 11:49 AM
Last Updated : 07 Dec 2014 11:49 AM

ரஞ்சி கிரிக்கெட் இன்று தொடக்கம்: தமிழகம்-நடப்பு சாம்பியன் கர்நாடகம் மோதல்

2014-15 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடங்குகின்றன. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடகத்தை சந்திக்கிறது.

ஏ பிரிவில் தமிழகம் தவிர, கர்நாடகம், பெங்கால், மும்பை, ரயில்வே, உத்தரப் பிரதேசம், பரோடா, ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பெங்களூரில் இன்று தொடங்கும் போட்டியில் முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோர் இல்லாமல் கர்நாடகத்தைச் சந்திக்கிறது தமிழக அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதால் விஜய் பங்கேற்கவில்லை. பத்ரிநாத், விதர்பா அணிக்கு மாறிவிட்டார்.

இதனால் தமிழக அணியின் கேப்டன் ஆர். பிரசன்னாவுக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. முகுந்த், தினேஷ் கார்த்திக், பாபா அபராஜித், பிரசன்னா என தமிழக அணி பேட்டிங்கில் ஓரளவு வலுவாக இருந்தாலும், பவுலிங்கில் சொல்லிக்கொள்ளும்படியில்லை.

கடந்த ஆண்டு பி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி, 8 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. அதனால் 7-வது இடத்தைப் பிடித்து நாக் அவுட் பிரிவுக்குத் தகுதி பெறாமல் போனது. ஆனால் இந்த முறை தமிழக அணி, புதிய உத்திகளுடன் களமிறங்கும் என்று நம்பலாம்.

அதநேரத்தில் கர்நாடக அணி, பீமபலம் கொண்டதாக உள்ளது. கடந்த சீசனில் ரஞ்சி, விஜய் ஹசாரே, இரானி கோப்பை என மூன்று போட்டிகளை கர்நாடகா வென்றுள்ளது. கர்நாடகாவின் மூன்று வீரர்கள் (உத்தப்பா, மணீஷ் பாண்டே, பின்னி) உலகக்கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகி ரஞ்சி போட்டியில் இடம்பெற முடியாமல் போனாலும் கர்நாடகாவின் பேட்டிங் வலுவா கவே உள்ளது. ராபின் உத்தப்பா, மயங்க் அகர்வால், கருண் நாயர், மணீஷ் பாண்டே, குணால் கபூர், சி.எம்.கவுதம் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பவுலிங்கில் கேப்டன் வினய் குமார், அபிமன்யூ மிதுன், எச்.எஸ். ஷரத், ஸ்ரேயாஸ் கோபால் என எதிரணியை இருமுறை ஆல் அவுட் செய்யக்கூடிய பந்துவீச்சை கொண்டுள்ளது கர்நாடகம். அதனால் இந்தப் போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்க கர்நாடகம் விரும்பும்.

ஏ பிரிவு

கர்நாடகா, தமிழகம், பெங்கால், மும்பை, ரயில்வே, உத்தரப் பிரதேசம், பரோடா, ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம்

பி பிரிவு

மகராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், சவுராஸ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, விதர்பா, ஹரியாணா, ஒடிஸா

சி பிரிவு

கோவா, இமாசல பிரதேசம், கேரளா, ஹைதராபாத், ஆந்திரா, அசாம், திரிபுரா, ஜார்க்கண்ட், சர்வீசஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x