

மத்தியப் பிரதேச மாநிலம் போபா லில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலை விஷவாயு கசிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது.
1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத் தாகக் கருதப்படும் இதில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், 5,295 பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களது குடும்பத் தினருக்கு இழப்பீடு வழங்கப் பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச மாநில மறுவாழ்வுத் துறை துணை செயலாளர் கே.கே.துபே தெரிவித்துள்ளார். எனினும், ‘போபால் குரூப் ஆஃப் இன்ஃபர் மேஷன் ஆக் ஷன்’ என்ற தன் னார்வத் தொண்டு அமைப்பின் நிர்வாகி ரச்னா திங்ரா கூறியதாவது:
இந்த விபத்தில் எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி வருகிறோம். ஆனால், அரசு இதுவரை 5,295 பேரின் குடும்பத்துக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளது.
இதுதவிர, அந்த தொழிற்சாலை பகுதியில் உள்ள 350 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுப் பொருட்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன் நிலத் தடி நீரும் மாசடைந்து வருகிறது.
இந்த நச்சுக் கழிவை அகற்ற வலியுறுத்தி யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக அமெரிக் காவின் நியூயார்க் நகரில் உள்ள தென்னக மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இதுவிஷயத்தில் மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசுகள் போதுமான கவனம் செலுத்தாத தால் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை விரைந்து நடத்த மாநில அரசு தலையிட வேண்டும். இவ்வாறு திங்ரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நினைவஞ்சலி
போபால் விஷ வாயு விபத்து நினைவு தினத்தை முன்னிட்டு, அதில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவி செய்யப்படும் என்றும் இரு அவைகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.
மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறும்போது, “யூனியன் கார்பைடு தொழிற்சாலை விபத்துக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை ஆதரவாக இருப்போம்” என்றார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அவை உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.