

கர்நாடக மாநிலம் மைசூருவில் தன்னை கேலி செய்த வாலிபரை பெண் பத்திரிகையாளர் ஒருவர் அடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த லோக்நாத் என்பவரின் மகள் சைத்ரா (31). எம்பிஏ பட்டதாரி யான இவர் பல்வேறு கன்னட பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகிறார். கன்னட திரைப்படங் களிலும் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பணி நிமித்தமாக மைசூருக்கு சென்ற அவர், அன்று மாலை பெங்களூருவுக்கு திரும்புவதற் காக பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த முகமது சமீர் (31) என்பவர் பாலியல் ரீதியாக சைத்ராவை கிண்டல் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடைய துணியைப் பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சைத்ரா, சமீரின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பைப்பைக் கொண்டு அவரை விளாசியுள்ளார். மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, போலீஸாரிடம் சமீரை ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மைசூரு மாநகர போலீஸார் சமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குவியும் பாராட்டுகள்
கேலி செய்த வாலிபரை யாருடைய உதவியும் இல்லாமல் துணிச்சலாக அடித்து, போலீஸில் ஒப்படைத்த சைத்ராவின் தைரியத்தை பல்வேறு மகளிர் அமைப்புகள் பாராட்டி உள்ளன. இதனிடையே, கடந்த புதன்கிழமை மைசூரு மாநகர காவல் ஆணையர் எம்.ஏ.சலிம், சைத்ராவுக்கு ரூ.1,000 ரொக்கப்பரிசும், பாராட்டு பத்திரமும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கர்நாடக மகளிர் நல ஆணையத்தின் சார்பில் சைத்ராவுக்கு பாராட்டு விழா நடைபெற்று. இதில் கலந்து கொண்ட மகளிர் நல ஆணை யத்தின் தலைவி மஞ்சுளா மானஸா, “பொது இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினையை யாரும் எதிர்ப்பதில்லை. மைசூரு பேருந்து நிலையத்தில் சைத்ராவுக்கு ஏற்பட்ட கொடுமையை வேடிக்கை பார்த்த ஒருவரும் உதவவில்லை. இருப்பினும் அவர் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார்” என பாராட்டினார். மேலும் சைத்ராவின் தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் வழங்கினார்.
கேலி செய்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்த சைத்ராவுக்கு பாராட்டு பத்திரமும் ரொக்கப்பரிசும் வழங்கும் மைசூர் மாநகர காவல் ஆணையர் எம்.ஏ.சலிம்.