Published : 09 Dec 2014 09:14 AM
Last Updated : 09 Dec 2014 09:14 AM

மு.க.ஸ்டாலின், அமைச்சர் பேச்சால் பேரவையில் கடும் அமளி: திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டதால் திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. இதில், சட்டப்பேரவை திமுக குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த நிதி ஆண்டின் துணை நிதிநிலை மதிப்பீடு ரூ.1,751.18 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவையில் 110-வது விதியின் கீழ் சுமார் ரூ.31,208 கோடி அளவுக்கு முன்னாள் முதல்வர் திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் வெறும் ரூ.1,751 கோடிக்கு மட்டும் நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த ஆட்சியின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு எப்படி உள்ளது என்பது தெரிகிறது. அப்படியென்றால், ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் 110-வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்பதை முதல்வர்தான் விளக்க வேண்டும்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஏற்கெனவே கடந்த 4-ம் தேதி, 110-வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினேன். அப்போது, எனது விளக்கத்தைக் கேட்க பொறுமை இல்லாமல் அறிக்கையாக கொடுத்துவிடுங்கள். நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று திமுக உறுப்பினர்கள் கேட்டனர். நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று கூறி விரிவாக விளக்கினேன்.

அமைச்சர்களின் பதிலுரை களை திமுக உறுப்பினர்கள் கவனிப்பதும் இல்லை. சரியாகப் புரிந்துகொள்வதும் இல்லை. மின்சாரம் கொள்முதல் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திலும் மின் துறை அமைச்சர் விரிவாக பதிலளித்தார். அப்போது வெளியே சென்ற ஸ்டாலின், அமைச்சர் பேசியது ஒன்றும் புரியவில்லை என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அதனால்தான், திமுகவினருக்கு ஒன்றும் புரியவில்லை என்றேன். அமைச்சர்கள் பதில் கூறும்போது தொடர்ந்து இடையூறு செய்தால், அமைச்சர்களின் பதில் ஒன்றும் புரியாதுதான்.

இவ்வாறு கூறிய முதல்வர், 110-வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது ஸ்டாலின் எழுந்து மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘நீங்கள் மீண்டும் 110-வது விதியில் அறிவித்த திட்டங்களைக் கேட்டால் மீண்டும் விளக்குவேன்’ என்று கூறி அமர்ந்தார்.

பின்னர் ஸ்டாலின் எழுந்து, ‘….. முதல்வர்’ என முதல்வரைப் பற்றி ஒரு வார்த்தையை குறிப்பிட்டு பேச்சைத் தொடங்கினார். அதைக் கேட்டதும், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து ஸ்டாலினை எதிர்த்து கூச்சலிட்டனர். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் அதிமுகவினரைப் பார்த்து கூச்சல் போட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது. யாருடைய பேச்சும் மற்றவர்களுக்கு கேட்கவில்லை.

பேரவைத் தலைவர் ப.தனபால், திமுகவினரை அமைதியாக அமரும்படி எச்சரித்தார். 5 நிமிடங்களுக்கு மேல் இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் விமர்சித்து சத்தம் போட்டதால் அவை பரபரப்பாக காணப்பட்டது. ஸ்டாலின் கூறிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அப்போது அமைச்சர் வைத்திய லிங்கம் எழுந்து, ஸ்டாலினைப் பார்த்து, ‘உங்கள் குடும்ப ஆட்சி தான் ஊழல் ஆட்சி, மத்தியில் ஊழல் செய்வதற்கு மகள், இங்கே மகன்…’ என்று பேசத் தொடங்கினார். இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரினர்.

அதை ஏற்காததால் திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கை அருகே வந்து முற்றுகையிட்டனர். அப்போதும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் சத்தம் போட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். பேரவைக் காவலர்கள் வந்து திமுகவினரை வெளியேற்றினர். திமுக உறுப்பினர்கள் அதிமுக ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டவாறு வெளியேறினர்.

3 நாட்கள் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் திமுகவினர் வெளியேற்றப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

சிவசங்கரன், அன்பழகனுக்கு எச்சரிக்கை

திமுக உறுப்பினர்கள் சிவசங்கரன், ஜெ.அன்பழகன் ஆகியோர் அவையை விட்டு வெளியேறும்போது, பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கிச் சென்று, ஏதோ ஆவேசமாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் அமைச்சர் வளர்மதி எழுந்து, ‘‘திமுக உறுப்பினர்கள் அவையில் நடந்துகொண்ட விதம் மோசமானது. உறுப்பினர்கள் சிவசங்கரன் மற்றும் அன்பழகன் மீது அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் கூறும்போது, ‘‘பலமுறை எச்சரித்தும், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இனிமேல் அவர்கள் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x