Published : 06 Dec 2014 01:56 PM
Last Updated : 06 Dec 2014 01:56 PM

இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: காஷ்மீர் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் தீவிரவாதிகள் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் தீவிரவாதிகள் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் நமது வீரர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

இத்தாக்குதலில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் சங்கல்ப் குமார் சுக்லா உயிர் தியாகம் செய்துள்ளார். அவரது தியாகம், தலைமுறைகள் கடந்து நிலைத்து நிற்கும்.

சங்கல் குமார் சுக்லாவுக்கு, தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிர் நீத்த மற்ற வீரர்களுக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்" என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர்.

தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் 3 இடங்களில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 2 பேரும், இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x