

இந்துத்துவா அமைப்புகளால் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் கட்டாய மதமாற்றம் உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசனில் முன்னாள் பிரதமரும்,மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி ஆட்சியை பிடித்த பாஜக, இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக நாட்டை பிற்போக்குத்தனமான மதப் பிரச்சினைக்குள் அழைத்து சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் கடந்த 6 மாதங்களில் அதிக மதக் கலவரங்கள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும் கட்டாய மதமாற்றம் செய்து வருகின்றன. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் நடைபெறும் இத்தகைய கட்டாய மதமாற்றங்கள் உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல், மவுனமாக இருப்பது ஏன்?
மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதில் மோடி உள்ளிட்ட அனைவரும் மவுனமாக இருப்பதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இத்தகைய கட்டாய மதமாற்றங்களால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். மோடி மிகவும் நம்பும் வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள்.
பிப்ரவரியில் இணைப்பு?
பாஜக தலைமையிலான ஆட்சியின் மீது நாடு முழுவதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி இல்லாததால், ஆளும் கட்சியை கேள்வி கேட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது பிரிந்திருக்கும் அனைத்து ஜனதா கட்சிகளையும் இணைக்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் நலனுக்காக முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்துள்ளோம்.
ஜனதா கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக்கும் எங்களுடைய அணியில் இணைவார். அநேகமாக பிப்ரவரியில் 'ஜனதா பரிவார்' உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தேர்தல்களில் நாடு முழுவதும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளோம்.
ஜனதா பரிவார் உருவாக்கப்பட்டால் காங்கிரஸ்,பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அதே நேரத்தில் மதச்சார்பற்ற அரசை நிறுவி, மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முடியும். எனவே ஜனதா கட்சிகளின் ஒருங்கிணைப்பு காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்து தலைவரும் உணர்ந்திருக்கிறோம்''என்றார்.