Last Updated : 12 Dec, 2014 08:59 PM

 

Published : 12 Dec 2014 08:59 PM
Last Updated : 12 Dec 2014 08:59 PM

ஐ.எஸ். ஆதரவு ட்விட்டர் பக்கம் பெங்களூருவிலிருந்து செயல்பட்டது: சேனல் 4 தகவல்

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ட்விட்டர் பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப்படுவதாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இராக், சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு இஸ்லாமிய தனி நாடு அமைக்கும் நோக்கத்தோடு போரிட்டு வரும் ஐ.எஸ். இயக்கம் சர்வதேச அளவில் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மக்கள் பலரை பிணை கைதிகளாக கொண்டிருக்கும் இந்த அமைப்பினர் அவ்வப்போது படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் பல நாடுகளில் அவர்களது கிளையை பரப்பும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர். இதற்கு அவர்கள் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்ப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ட்விட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். கோட்பாடுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்த மேதி மசூத் என்ற பெயர் கொண்ட 'ஷமி விட்னஸ்' பக்கத்தை கண்காணித்து வந்ததில் அந்த பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் சேனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த பக்கத்தை இயக்கும் நபரின் விவரத்தை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும், கண்காணிக்கப்பட்ட அந்த நபர் ஐ.எஸ். அமைப்பில் இணையவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் அனைவரும் அவர் ஒருவரின் நிதி ஆதாரத்தை கொண்டே இருப்பதனால் அந்த நபர் இயக்கத்தில் சேரவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

"குடும்ப பொறுப்புகளிலிருந்து விலக வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்போதோ ஐ.எஸ்-ல் இணைந்திருப்பேன்" என்று அந்த நபர் கூறியதாக சேனல் 4 செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டரில் 'ஷமி விட்னஸ்' என்ற அந்த பக்கத்தை சுமார் 17,700 பேர் பின்தொடர்ந்து வந்த நிலையில் சேனல் 4 நிறுவனத்தின் செய்தி வெளியீட்டை அடுத்து அந்த பக்கம் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பையை சேந்த இளைஞர்கள் ஐ.எஸ்-ல் இணைவதற்காக இந்தியாவிலிருந்து சென்ற நிலையில் அவர்களுள் ஆரிஃப் மஜீத் என்ற இளைஞர் மட்டும் உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் முயற்சிகளின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் பெங்களூரு இளைஞர் தொடர்பான தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் குறித்து விசாரித்து வருவதாக பெங்களூரு காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெங்களூரு காவல்த்துறை ஆணையர் எம்.என். ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இந்த தகவல் குறித்த விவரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்.

பெங்களூரு நகரத்துக்கு எதிரான எத்தகைய அச்சுறுத்தலையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தொடர்பான நபர் குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x