

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க தீட்டிய சதித் திட்டத்தில் ‘திருமண மண்டபம்’, ‘சமையல்காரர்கள்’, ‘மசாலா பொடிகள்’ ஆகிய சங்கேத மொழிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் உளவாளியான இலங்கை கண்டியைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன் (37) என்பவர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சென்னை யில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதும் இதற்காக மாலத்தீவில் இருந்து 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதும் தெரியவந்தது. இந்த சதித்திட்டத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக செயல்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது.
இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தில், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் உத்தரவின்பேரில் சென்னையில் உளவு பார்த்ததாகவும் பாங்காக்கில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகளை சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தன் மீதான குற்றச்சாட்டை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சங்கேத மொழிகள்
அமெரிக்க தூதரகத்தை தாக்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தில் பல் வேறு சங்கேத மொழிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமெரிக்க தூதரக தாக்குத லுக்கு ‘திருமண மண்டபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாலத்தீவைச் சேர்ந்த தற் கொலைப் படை தீவிரவாதிகள் இருவரையும் ‘சமையல்காரர்கள்’ என்றும் வெடிகுண்டுகளை ‘மசாலா பொடிகள்’ என்றும் குறிப்பிட் டுள்ளனர்.
ஜாகீர் உசேன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமது சலீம் ஆகி யோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து வருவதால் அவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
தமிழகத்தில் உளவாளிகள்
தமிழகத்தில் அண்மைக் காலமாக பாகிஸ்தான் உளவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2013 செப்டம்பர் 17-ம்தேதி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டார். இந்திய ராணுவ ரகசியங்களை அவர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. இதனிடையே கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மற்றொரு பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் சென்னை சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்டார். அதிக பாதுகாப்பு நிறைந்த கடற்படை, விமானப்படை தளங்களுக்குள்ளும் புகுந்து அவர் புகைப்படம் எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த உளவாளிகள் அனைவரையும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அமீர் சுபைர் சித்திக் என்பவரே தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவின் அழுத்தம் காரணமாக அவர் அண்மையில் கொழும்பில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய விவரங்களை திரட்ட இலங்கைக்குச் நேரில் சென்று விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போது மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.