Published : 25 Dec 2014 02:47 PM
Last Updated : 25 Dec 2014 02:47 PM

சைவத்துக்கு பதில் அசைவ உணவு: பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க சுவிஸ் விமான நிறுவனத்துக்கு உத்தரவு

விமான பயணத்தின்போது இந்திய பயணிக்கு சைவத்துக்கு பதில் அசைவ உணவை வழங்கிய சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மே 6-ம் தேதி அமித் ஜெயின் சுவிட்சர் லாந்தின் ஜுரிச் நகரிலிருந்து மும்பைக்கு சுவிஸ் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்த மான விமானத்தில் பயணம் செய் தார். அப்போது சைவ உணவுக்கு ஆர்டர் கொடுத்திருந்த அவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய மும்பை மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பில் அமித் புகார் செய்தார். தனது மத உணர்வை புண்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.18 லட்சமும் வழக்கு செலவாக ரூ.1 லட்சமும் வழங்க விமான நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு அதில் கோரியிருந்தார்.

இது தொடர்பான விசாரணை யின்போது, அமித் சைவ உணவை ஆர்டர் செய்திருந்ததாகவும் ஊழி யரின் கவனக்குறைவால் அசைவ உணவு வழங்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் ஒப்புக் கொண்டது. அதேநேரம், பின்னர் அவர் கேட்டபடி சைவ உணவு வழங்கப்பட்டதாகவும், தவறுக்காக அந்த ஊழியர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நுகர்வோர் அமைப்பு, “அமித்தின் மத உணர்வை புண் படுத்தியதற்காக ரூ.20 ஆயிரமும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரமும் சுவிஸ் விமான நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இதுபோல மும்பையைச் சேர்ந்த ருக் ஷத் தவார் கடந்த 2012-ம் ஆண்டு இதே விமான நிறு வனத்துக்கு சொந்தமான மும்பை-துபாய் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் எடுத்துச் சென்ற பை காணாமல் போனது. அடுத்த நாள் அந்த பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், மன உளைச்சலுக்கு ஆளானதால் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு மும்பை மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பில் ருக் ஷத்தவார் புகார் செய்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் அமைப்பு, பயணிக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் பை காணாமல் போனதால் அத்தியாவசியமான சில பொருட்களை வாங்கியதற்கான செலவை (ரூ.7.650) திருப்பித் தருமாறும் விமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x