

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க இடதுசாரி தலை வர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, சாரதா சிட் பண்ட் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பாக ஒருங்கிணைந்த விசா ரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் பிமன் போஸ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 5 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறும் போது, “நிதி நிறுவன மோசடி களை மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் தனித்தனியே விசாரித்து வருகின்றன. சிபிஐ, செபி, எஸ்.எப்.ஐ.ஓ. என பல அமைப்புகள் விசாரிக்கின்றன.
இந்த முறைகேடுகளில் மிகப் பெரிய சதி உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா, ஒடிஸா, அசாம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங் களில் இந்த முறைகேடு பரந்து விரிந்துள்ளது. இந்த ஊழலின் வேர் வரை செல்வதற்கு, ஒருங் கிணைந்த விசாரணை தேவை என்று பிரதமரிடம் கேட்டுக் கொண் டோம்.
இது தொடர்பாக தீவிரமாக பரிசீலிப்பதாக பிரதமர் எங்களிடம் உறுதி அளித்தார்” என்றார்.
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர் பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று பிரதமரிடம் கேட்டீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு யெச்சூரி, “இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப் பட்ட அனைவரும் மம்தா உள்பட பலரது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதை நாங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளோம். யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது சந்தேகம் எழுந்தாலோ அல்லது குற்றச்சாட்டு எழுந்தாலோ அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களின் பணத்தை இந்த நிதி நிறுவனங்கள் கொள்ளை அடித்துள்ளன. இந்த நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றார்.