

அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முலாயம்சிங் இதுதொடர்பாக பேசியதாவது:
ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து நான் வாதாடி வருகிறேன். ஆங்கிலத்தை விரட்ட வேண்டும் என நான் சொல்லவில்லை. யாரேனும் ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவர் தாரளமாகக் கற்கலாம்.
நான் இந்திக்காக மட்டும் பேசவில்லை. அனைத்து இந்திய மொழிகளுக்காகவும்தான் குரல் கொடுக்கிறேன். அரசு சார்ந்த பணிகள் இந்திய மொழிகளில் மேற்கொள்ளப்படுமானால், இந்தி தானாகவே பரவலாக வளரும். அரசு அலுவலகங்களில் இந்திய மொழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களிடம் இந்தியில் வாக்குக் கேட்பவர்கள், நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அவர்களால் ஆங்கிலத்தில் பேசி வாக்குச் சேகரித்து, வைப்புத் தொகையை (டெபாசிட்) தக்க வைக்க முடியுமா என சவால் விடுகிறேன்.
1996-98-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது, அலுவலகப் பயன்பாட்டுக்கு முதன்முதலாக இந்தியைக் கொண்டு வந்தேன். அப்போது எனது ஆலோசகராகப் பணியாற்றிய ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்தியைக் கற்றுக் கொண்டார். அவரால் இந்தியில் முன்னேற்பாடின்றி சரளமாகப் பேசவும் முடியும். உலகிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் தாய்மொழியில்தான் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.