சாமியார் அசரம் பாபு மீது புகார் செய்த பெண் திடீர் மாயம்

சாமியார் அசரம் பாபு மீது புகார் செய்த பெண் திடீர் மாயம்
Updated on
1 min read

சாமியார் அசரம் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்த 33 வயது மதிக்கத்தக்க பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை. தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் மாயமாகியுள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அகமதாபாத்தில் அசரம் பாபுவின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது 1997 முதல் 2006ம் ஆண்டு வரை தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக அசரம் பாபு மீது பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு புகார் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அசரம் பாபுவை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் ராஜஸ்தானில் உள்ள சிறை ஒன்றில் இருக்கிறார்.

இந்நிலையில், புகார் செய்த அந்தப் பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவரின் பாதுகாப்புக்கு நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களிடம் கடந்த 14ம் தேதி அம்ரோலி நகரத்தில் உள்ள தங்கள் உறவினர் இல்லத் திருமணத்துக்குச் செல்வதாகவும், அங்கு தனக்குப் பாதுகாப்பு தேவைப்படாது எனவும் அந்தப் பெண் கூறியுள்ளார். அவருடன் தன் கணவர் மற்றும் மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

திருமணத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற அந்தப் பெண் நான்கு நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தால் 18ம் தேதி போலீஸார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸார் அம்ரோலி நகரத்தில் அந்தப் பெண் கூறியபடி திருமண நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. அந்தப் பெண் பயன்படுத்தி வரும் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரைத் தேடும் பணி கடினமாகியுள்ளது என போலீஸார் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in