

பெங்களூரு சர்ச் வீதியில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு வெடித்தது பைப் வெடிகுண்டு என தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் கடந்த மே மாதம் சென்னையிலும், கடந்த ஜூலை மாதம் புனேவிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை ஒத்து இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் தரப்பில், சம்பவ பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த 11 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு நிறுவனத்துடன் பெங்களூரு, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தமிழக போலீஸாரும் விசாரணையில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 16-ம் தேதி பெங்களூருவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பிய சிமி தீவிரவாதிகள் 5 பேரில் இருவர் ஹொசபேட் பகுதியில் காணப்பட்டதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறியே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது என விசாரணை வட்டாரம் கூறியுள்ளது.
ட்விட்டரில் வதந்தி பரப்பியவர் கைது
இதற்கிடையில் @LatestAbdul என்ற ட்விட்டர் பக்கத்தில் இடப்பட்டிருந்த நிலைத்தகவல் பரபரப்பை கிளப்பியது. அதில், பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தானே காரணம் எனவும் அதன் கீழே ஐ.எஸ்.ஐ.எஸ். எனவும் குறிப்பிடப்பிட்டிருந்தது.
இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பெங்களூரு காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, போலி ட்விட்டர் கணக்குகள் பல உலா வருவதாகவும். இருப்பினும், குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பக்கம் தொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 17 வயது இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.