

நாடு முழுவதும் உருவாக்கப்படவுள்ள 100 திறன்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் பொருளாதார செயல்பாடுகளின் கேந்திரமாக வடிவமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திறன் மிகு நகரங்கள் உருவாக்கம் குறித்த உயர்நிலை அளவிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இத்திட்ட ஆலோசனைகளைத் தொடங்கும் விதத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது “21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் பொருளாதார செயல்பாடுகளின் கேந்திரமாக திறன்மிகு நகரங்கள் உருவாக்கப்படும். நகர்ப்புற மக்கள் சார்ந்து இவை உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்து மத்திய, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைப்புகளுக்கு இதுதொடர்பான பணிமனையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்த வேண்டும். திறன்மிகு நகர உருவாக்கம் என்பது நகரங்களில் தரமான நிர்வாகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் வலிமையான நிர்வாகமாக அது உருவெடுக்கும். 21-ம் நூற்றாண்டின் நகரங்களாக, அடிப்படைக கட்டமைப்புகள், வாழ்க்கைத் தரம், குடிமக்களை மையப்படுத்திய தேவைகள் ஆகியவற்றை அதிகாரிகள் அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும்.
நகர்ப்புற மேம்பாடு தொடர்பான சட்டங்களில் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவை திறன்மிகு நகரங்களின் முக்கியமான அங்கமாக இருக்கும்” என்றார்.
இக்கூட்டத்தில், பிரதமர் அலுவலகம், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.