

டெல்லியில் ‘உபேர்’ நிறுவன வாடகைக் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்கின் விவரங்களை, விசாரணை அதிகாரியான டெல்லி (வடக்கு) காவல் துறை துணை ஆணையர் மதுர் வர்மா ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
பலாத்காரம் போன்ற கிரிமினல் வழக்குகளின் விவரங்களை, காவல் துறையினர் நீதிமன்றம் அல்லது வழக்கில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் களுக்கு மட்டும் தெரிவிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கோ, வழக்கில் தொடர்புடையவர்களுக்கோ தெரிவிப்பதில்லை. ஆனால், டெல்லியில் கடந்த 5 ம் தேதி உபேர் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் அந்த வழக்கை விசாரிக்கும் துணை ஆணையர் மதுர்வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் தகவல் அளித்து வருகிறார்.
கடந்த 10-ம் தேதி ஹாங்காங்கில் உள்ள உபேர் கால் டாக்ஸியின் ஆசியப் பகுதி தலைவர் எரிக் அலெக் ஸாண்டரிடம் விசாரணை நடத்திய அடுத்த சில நிமிடங்களில் வர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘உபேர் கால் டாக்ஸியின் ஆசியா பகுதி தலைவர் எரிக் அலெக்ஸாண்டரிடம் நடத்திய விசாரணையில், தம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி இன்னும் அதிக மான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டர் மூலம் புகார்
அவரது ட்விட்டர் செய்தியைப் படித்த அமெரிக்காவிலுள்ள நிதி சர்மா என்ற பெண் தான் கடந்த நவம்பரில் இந்தியா வந்த போது உபேர் கால் டாக்ஸியின் ஓட்டுநர் ஷிவ் குமார் வர்மா தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக, பதில் ட்விட் செய்திருந்தார். அதைப் படித்த மதுர் வர்மா, அது பற்றிய புகாரை டிவிட்டரிலேயே பதிவு செய்யும்படி நிதி சர்மாவிடம் கேட்டுப் பெற்றார்.
இந்த வழக்கில் .வர்மா ட்விட்டரில் அளிக்கும் தகவலை பாஜக எம்.பி. மீனாட்சி லேக்கி, செய்தியாளர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் உட்பட 2870 பேர் பின்பற்றி படித்து வருகிறார்கள்.
கடந்த 2012 டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பலாத்கார வழக்கு குறித்த விவரங்களை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு முறையாக பதில் அளிக்காததால்தான் நாடு முழுவதும் பெரிய போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.