Published : 12 Dec 2014 10:21 AM
Last Updated : 12 Dec 2014 10:21 AM

மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: வைகோ

மக்களை வாட்டி வதைக்கும் இந்த மின் கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திரும்பப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.6,854 கோடி உடனடியாக தேவைப்படுவதால், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை 15 விழுக்காடு உயர்த்தி இருக்கிறது.

இந்த மின் கட்டண உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உலக வங்கியின் ஆணைப்படி மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன்தான் மத்திய அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தது.

2003 இல் மின்சார சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவதை ஏற்க முடியாது.

1994 இல் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்காக தனியாரிடமிருந்து 0.4 விழுக்காடு மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்த நிலைமை மாறி, தற்போது மின்சார வாரியம் 20 விழுக்காடு மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது.

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 17.74க்கு மின்சார வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.

ஆனால், தமிழக மின்சார வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரத்தின் அதிகபட்ச விலை யூனிட்டுக்கு ரூ.2.14 மட்டுமே. புனல் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு வெறும் 21 பைசா மட்டுமே. ஆனால், தனியாரிடமிருந்து ரூ.17.74க்கு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால், அதற்காக செலவழிக்க வேண்டிய தொகை சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் மின்சாரம் விலை கொடுத்து வாங்குவதற்காக பட்ட கடனுக்கு வட்டி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலைமை உள்ளதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

மின்சார வாரியத்துக்கு நட்டம் ஏற்படுவதால் அதை ஈடுகட்டுவதற்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மின்சார வாரியத்தின் நட்டத்துக்கும், வருமான இழப்புக்கும் யார் காரணம்? தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை உருவானது எதனால் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

வீடுகளுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்தோர், மின் கட்டணமாக 2,000 ரூபாய் செலுத்தினார்கள். இனி இவர்கள் கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டுக்கும் மேல் மின் நுகர்வு செய்வோர் இரு மாதங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.75 இல் இருந்து ரூ.6.60 என்று ஒரு யூனிட்டுக்கு 85 பைசா கூடுதலாக செலுத்த வேண்டும்.

மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்கக்கூடாது என்று மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால், இரு மாதத்துக்கு 500 யூனிட் வரை மின் நுகர்வோருக்கு மட்டுமே இதனால் கனிசமான பயன் இருக்கும். தற்போது மின்சார கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டதால், இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேலே மின்சாரம் தேவைப்படுகிறது.

அதிமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டு காலத்தில் 30 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. ஏற்கனவே விவசாயம், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்தும் மின் வெட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் கனரக தொழிற்சாலைகளும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழக மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் இருந்தது, மின் உற்பத்தித் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றத் தவறியது மற்றும் தனியார் மின் நிறுவனங்கள் மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது போன்ற காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நட்டம் ஏற்பட்டு, வீழ்ச்சி அடைந்து வருகிறது.

அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது ஏற்றுவதை ஏற்க முடியாது. எனவே மக்களை வாட்டி வதைக்கும் இந்த மின் கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திரும்பப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x