Published : 25 Dec 2014 04:28 PM
Last Updated : 25 Dec 2014 04:28 PM

காந்தர்வ வேதம்: கீதம், நாட்டியம், நாடகம்

சங்கீதம் என்றால் பாட்டு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல், பாட்டு, டான்ஸ், டிராமா என்ற மூன்றும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். கீத வித்யை, நிருத்யம், நாடகம் ஆகிய இந்த மூன்றுமே ஆதிகாலத்திலிருந்து அப்பியாசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. சினிமாவும் நாடகம் என்பதன் கீழ் வந்துவிடும்.

காந்தர்வ வேதத்தில் பெரிய ‘அதாரிடி'யாக இருக்கப்பட்ட பரத சாஸ்த்திரத்தில் சங்கீதம், நாட்டியம் இரண்டையும் சேர்த்துத்தான் விவரித்திருக்கிறது. சங்கீதம் என்று இப்போது சொல்கிற பாட்டுக்கு பரதர்தான் ஆதியில் பூர்ணமாக விவரணம் கொடுத்தவர் என்று சொல்லி மியூஸிக் கான்ஃபரன்ஸ்களிலெல்லாம் அவரை நிறைய quote பண்ணுகிறார்கள்.

தியாகராஜ சுவாமிகள்கூட தம் கீர்த்தனையில் அவர் பேரைச் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதே சமயத்தில் டான்சுக்கு ‘பரத நாட்டியம்' என்றே பேர் போடுகிறார்கள். நடனக் கலைக்கான ரூல்களை பரத சாஸ்திரத்திலிருந்தே காட்டுகிறார்கள்.

கொஞ்ச காலத்துக்கு முந்தி பார்த்தோம். ‘சங்கீத நாடக அகாடமி' என்று பேர் வைத்துக்கொண்டு அதெப்படி நாட்டியக்காரர்களையும் கௌரவிக்கிறீர்கள்? ‘ஸங்கீத நாட்டிய நாடக அகாடமி' என்று பெயரை மாற்ற வேண்டாமா? என்று சில பேர் கேட்டார்கள். அதற்கு அந்த ஸ்தாபனத்தார் கொடுத்த பதிலில், சங்கீதம் என்றாலே வாய்ப்பாட்டு, வாத்தியம், நாட்டியம் மூன்றும் என்றுதான் பிராசீனமான ‘டெஃபனிஷன்’ என்று இருக்கிறது என காட்டியிருந்தார்கள்.

நாடகம் என்பதையும் இதே மாதிரி நாட்டியத்திலிருந்து பிரிக்க முடியாது. ‘நட' என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் நடனம், நாட்டியம் என்ற இரண்டு வார்த்தைகளும், நாடகம் என்ற வார்த்தையும் வந்திருக்கின்றன. மூவ்மெண்டைக் குறிக்கிற வார்த்தை அது. தமிழில் நடப்பது என்கிறோம். நடப்பதும், நடிப்பதும், ஆடுவதும், பாடுவதும் எல்லாம் கிட்டத்தட்ட, ஒன்றையொன்று தழுவி இருப்பவைதான்.

தமிழில் ‘கூத்து' என்பது டான்ஸ், டிராமா இரண்டையும் குறிப்பதுதான். அம்பலக்கூத்தன், கூத்தப்பிரான் என்கிறபோது நடராஜா பண்ணுகிற நடனத்தைக் கூத்து என்கிறோம். தெருக்கூத்து என்கிறபோது நாடகம் என்பதைக் கூத்து என்கிறோம்.

நடிகன், நடிகை என்றால் தமிழில் சினிமா, டிராமாவில் ஆக்ட் பண்ணுகிறவர்கள் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு மூலமாக சமஸ்கிருதத்தில் உள்ள ‘நடன்', ‘நடீ' என்ற வார்த்தைக்கு டான்ஸ் பண்ணுகிறவர்கள், ஆக்ட் பண்ணுகிறவர்கள் என்று இரண்டு அர்த்தமும் இருக்கிறது.

டான்சில் சங்கீதத்தோடு சேர்த்து நவரசங்களை நடித்துக் காட்டுகிறார்கள். சீன், டிரெஸ், வேஷம் இல்லாமலே அப்படி செய்கிறார்கள். நாடகத்தில் அதே நவரசங்களை வசனத்தில் நடித்துக் காட்டுவார்கள். இது யதார்த்தத்துக்கு இன்னும் கிட்டேயிருப்பது. அதனால் சீன், தத்ரூபமாக அந்தந்த பாத்திரத்துக்கான வேஷம் எல்லாம் போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

இதெல்லாம் டான்சில் ரசிகர்களே பூர்த்தி செய்து கொள்ளும்படி விட்டிருப்பதே அதன் விசேஷம். கால் கையால் ‘மூவ்மெண்ட்', ‘இமோஷனல் மூவ்மெண்ட்' -உணர்ச்சி, அசைவு. ஒரு கதை அங்கம் அங்கமாய் ‘மூவ்' ஆவது என்று நாட்டிய, நாடகங்களில் பலவித மூவ்மெண்ட்கள் இருக்கின்றன.

பாடுவதை இசை என்றும் வசனமாகப் பேசுவதை இயல் என்றும் சொல்கிறார்கள். ‘இயல்' என்றால் இயல்பாக, அதாவது யதார்த்தமாக இருப்பது. இது எத்தனை நன்றாகயிருந்தாலும் சூட்சுமமான கலாரசத்தால் இதைப் பூர்த்தி பண்ணிக் கொண்டால்தான் ரசிக இருதயத்துக்கு நிறைவு ஏற்படுகிறது.

அதனால்தான் நாடகத்திலும் நடுநடுவே பாட்டு, டான்ஸ் எல்லாம் வருகிறது. டான்சிலே பாட்டு வந்தாலும் பேச்சு வருவதேயில்லை. பாட்டிலோ அங்க அசைவான டான்ஸ், பேச்சு இரண்டும் வராமலே அது பூர்ண ரசத்தைக் கொடுத்து விடுகிறது. ஆலாபனை பண்ணுகிறபோது வார்த்தை, அதற்கான நவரச உணர்ச்சி பாவங்கள் இவைகூட இல்லாமலே உள்ளத்தை நிறைவு பண்ணிவிடுகிறது. அதனால் அதற்கு ரொம்பவும் விசேஷமிருப்பதாகத் தெரிகிறது.

கானம் பண்ணுவது, நடனம், நாடகம் மூன்றும் சேர்ந்து காந்தர்வ வேதம். இதனால் நமக்குப் பணம் வராது. வயிறு ரொம்பாது. இவற்றைக் கச்சேரி, சதிர் என்று பண்ணுகிறவர்களுக்கு, நடிக்கிறவர்களுக்கு, நடத்துகிறவர்களுக்குத்தான் வயிறு ரொம்புகிறது. பர்சு ரொம்புகிறது. பார்க்கப்போகிற நாம் நம் வயிற்றுக்காக வைத்துக் கொண்டிருப்பதை அங்கே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறோம்.

‘யுடிலிடி' என்ற பாயிண்டில் இப்படி நஷ்டப்பட்டாலும் மனசுக்கு மகிழ்ச்சி, உல்லாசம், உற்சாகம், பொழுதுபோக்கு என்ற லாபம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். இது மட்டும் ‘யுடிலிடி' இல்லையா? கொத்தவரங்காய் வாங்கினால் சாப்பிடலாம். அதே காசுக்குப் பூ வாங்கி flower vase -ல் வைத்தால் சாப்பிட முடியாதுதான். இருந்தாலும் இதைப் பார்த்தால் நேத்ரானந்தமாயிருக்கிறது. மனம் குளிர்கிறது என்பதால் கொத்தவரங்காய் வேண்டாமென்று இந்த பொக்கேயை வாங்குகிறான் என்றால் இதற்கு 'யுடிலிடி' இல்லை என்று எப்படிச் சொல்வது?

அன்றாட அலுவல்களில், பொறுப்புகளில் அநுஷ்டானங்களில் அலுத்துக் களைத்துப் போகாமல் மனசுக்கு உற்சாகம் தரவேண்டியதுதான் என்றே உபயோகமில்லாததாகத் தோன்றுகிற பாட்டையும், கூத்தையும் பெரியவர்கள் ‘காந்தர்வ வேதம்' என்று வைத்திருக்கிறார்கள்.

மற்றவற்றின் உபயோகத்தை நாம் உணர்வதற்கான உற்சாகத்தைத் தரும் பெரிய உபயோகம் இவற்றுக்குத்தான் இருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் நமக்கு ஏற்படுகிற பாரத்தை மறந்து கொஞ்ச நேரமாவது இறக்கிவைப்பது காந்தர்வ வேதம் செய்யும் பெரிய உபகாரம்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x