Published : 03 Dec 2014 12:17 PM
Last Updated : 03 Dec 2014 12:17 PM

சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த முடிவு

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நாளைமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், இன்று காலை கூடியது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நாளைமுதல் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நாளை 4-ம் தேதி கூட்டத்தொடரின் முதல் நாளன்று, மறைந்த பேரவை உறுப்பினர்கள் 6 பேருக்கு நாளை இரங்கல் செலுத்தப்படுகிறது. கூடுதல் செலவிற்கான 2-வது துணை நிதிநிலை அறிக்கை பேரவையில் அளிக்கப்படுகிறது. 5-ம் தேதி பல்வேறு அரசினர் அலுவல்கள் நடைபெறுகின்றன.

6,7 தேதிகள் பேரவைக்கு விடுமுறை. 8-ம் தேதியன்று, 2014-2015-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான இரண்டாம் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், பதிலுரையும் மற்றும் அதில் கண்டுள்ள மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

தவிர, 2014-2015-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் ஆகிய பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

காவிரியில் கர்நாடகமும் பம்பை ஆற்றில் கேரளமும் அணை கட்ட முயற்சிப்பது, முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேரவையில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x