

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.) அமைப்பின் ஒரு பிரிவான, என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பு தாக்குதல் நடத்திய சோனித்பூர் மற்றும் கோக்ரஜர் மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறார். அதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட குவாஹாட்டி மாவட்டத்தில் அவர் மாநில உள்துறை அமைச்சர்களுடன் பேச்சு நடத்துகிறார்.
அசாம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு ஆதிவாசி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 81 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேச மற்றும் பூட்டான் பகுதி அசாம் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பூடான் மற்றும் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக அந்த நாடுகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பூடான் எல்லையும் மூடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன்பாக ராணுவ தளபதி தல்பீர் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேசினார். இதன் பின்ன்ர் தீவிரவாதிகளுக்கு எதிராக அசாமில் ராணுவத்தினர் தங்களது நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.