

மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த மனு விவரம்:
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிக முக்கிய மானவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சுந்திரபோஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. நேதாஜி விமான விபத்தில் இறந்ததை உறுதிப்படுத்த உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் 41 கோப்புகள் உள்ளன. அந்தக் கோப்புகளில், நேதாஜி தனது மகள் மற்றும் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் உட்பட பல்வேறு தகவல்கள் உள்ளன. அந்தக் கோப்புகள் வெளியிடப்பட்டால், சில நாடுகளுடனான உறவுகள் பாதிக்கும் என்பதால் அவற்றை வெளியிட மத்திய அரசு மறுக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 41 கோப்புகளில் உள்ள தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டு, நேதாஜி மரணம் தொடர்பாக மக்கள் மத்தியில் நீடிக்கும் மர்மங்களையும் விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேணு கோபால் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, ‘நேதாஜியின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, நேதாஜி தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும்’ என்றார்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன் வாதிட்டார்.
விசாரணைக்குப் பிறகு, மனுவுக்கு மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 15-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.