Last Updated : 22 Dec, 2014 11:43 AM

 

Published : 22 Dec 2014 11:43 AM
Last Updated : 22 Dec 2014 11:43 AM

போதிய விலை கிடைக்காததால் வீதியில் கொட்டப்படும் சாம்பார் வெள்ளரி: கிலோ ரூ. 4-க்கு வாங்க ஆளில்லை

விளைச்சல் அதிகரித்து விலையில் சரிவு ஏற்பட்டதால், சின்னமனூர் அருகே வீதியில் சாம்பார் வெள்ளரியைக் கொட்டிச் செல்கின்றனர் விவசாயிகள்.

தேனி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கத்தரி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக கேரள மக்கள் விரும்பிச் சாப்பிடும் சாம்பார் வெள்ளரியும் அடங்கும். சின்னமனூரைச் சுற்றியுள்ள அப்பியபட்டி, காமாட்சிபுரம், காஸ்பா, மூர்த்தி நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 150 ஏக்கருக்கு மேல் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விளைச்சல் அதிகரித்ததால் கேரளத்தில் விலையும் குறைந்துவிட்டது. உரிய விலை கிடைக்காததால், பறிக்கப்பட்ட வெள்ளரி காய்களை வீதியில் கொட்டிவிட்டு விவசாயிகள் வேதனையோடு செல்கின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அப்பியபட்டியைச் சேர்ந்த விவசாயி தன்ராஜ் கூறும்போது, தமிழக மக்கள் சாம்பார் வெள்ளரியை அவ்வளவாக விரும்புவதில்லை, ஆனால், கேரள மக்கள் கூட்டு, பொறியல், சாம்பார் போன்ற நளபாகத்துக்கும் வெள்ளரிக்காய் மற்றும் பழத்தை அதிக அளவில் பயன்படுத்துவது வழக்கம்.

கேரளத்தை நம்பியே, இப்பகுதியில் சாம்பார் வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம், ஒரு கிலோ ரூ. 10 வரை விலை போனது. ஆனால், தற்போது வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ. 4 என்ற அளவில் சரிந்துள்ளது. கேரளத்துக்கு மினி லாரியில் விளைபொருள்களைக் கொண்டு செல்ல குறைந்தது ரூ. 7 ஆயிரம் வாடகை ஆகிறது. இதுதவிர பறிப்புக் கூலி, உரம், மருந்து என கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

தற்போது கிலோ ரூ. 4-க்கு விற்பனையாவதால் விலை கட்டுபடியாகவில்லை. உள்ளூர் மக்களும் வெள்ளரியை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல விவசாயிகள் சாம்பார் வெள்ளரியை விற்பனைக்கு அனுப்பாமல் பறித்து வீதியில் கொட்டியும், சிலர் குழி தோண்டி மண்ணில் புதைத்தும் வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x