பல பெண்களை பலாத்காரம் செய்த உபேர் டாக்ஸி டிரைவர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

பல பெண்களை பலாத்காரம் செய்த உபேர் டாக்ஸி டிரைவர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
Updated on
2 min read

கால் டாக்ஸியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள உபேர் டாக்ஸி டிரைவர், ஏற்கெனவே பல பெண்களை பலாத்காரம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.

அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தலைமை ஆசிரியரின் மகன்

சிவகுமார் யாதவின் தந்தை ராம்நாத் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். அவரது குடும்பத்துக்கு சொந்த ஊரில் நிலங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பொருளாதார பிரச்சினை இல்லை.

சிறுவயது முதலே ஊதாரித் தனமாக வளர்ந்த சிவகுமார் யாதவ், 2003-ம் ஆண்டில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் உள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 2006-ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதானார். தொடர் குற்றங்கள் காரணமாக 2008-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவகுமார் வாழ்ந்த வீட்டின் அருகே அவரது உறவுகார பெண் வசித்து வந்தார். அவரிடம் பாசமாக பழகிய சிவகுமார் ஒரு நாள் தனது மிருக குணத்தை வெளிப்படுத்தி பலாத்காரம் செய் தார். கணவர், குழந்தைகளோடு வசித்த அந்தப் பெண், குடும்ப கவுரவம் கருதி நடந்த சம்பவத்தை வெளியில் கூறவில்லை. தற்போது 45 வயதாகும் அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

2011-ம் ஆண்டில் குர்காவ்ன் பார் நடனக் கலைஞரை பலாத்காரம் செய்த வழக்கில் சிவகுமார் யாதவ் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

ராம்நகருக்கு அருகில் உள்ள நாக்லா தார் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை ஆகஸ்ட் 2013-ல் துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இரவில் மட்டுமே பணி

சிவகுமார் யாதவ் பெண்களை குறிவைத்து இரவில் மட்டுமே கார் ஓட்டியுள்ளார். மால், சினிமா தியேட்டர், மதுபான பார்களின் முன்பு பெண் வாடிக் கையாளர்களுக்காக காத்திருந் துள்ளார்.

காரில் தனிமையில் வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளார். சில பெண்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டியுள்ளார்.

இதுவரை 6 பெண்கள் மட்டுமே அவர் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்ப கவுரவம் கருதி பலர் வெளியில் வரத் தயங்குகின்றனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஊருக்கு பொல்லாதவனாக இருந்தாலும் மனைவி, குழந்தை கள் மீது சிவகுமார் அதிக பாசம் வைத்துள்ளார்.

விதவையை மறுமணம் செய் துள்ள அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த அவர், மதுராவுக்கு தப்பிவந்து மனைவி யையும் மகள்களையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து தப்பி யோடியபோது போலீஸில் சிக்கி கொண்டார்.

அவரது தாய், தந்தை கூறும்போது, “ஊதாரி மகனை பெற்றதால் ஊரை விட்டே எங்களை ஒதுக்கும் நிலை ஏற்பட்டது, அவன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண் டிக்கப்பட வேண்டும்” என்றனர்.

டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்

உபேர் கால் டாக்ஸி சேவையை டெல்லி அரசு தடை செய்துள்ளது. இதைக் கண்டித்து அந்த கால் டாக்ஸியை சேர்ந்த டிரைவர்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in