

இதுவரை 10 கோடி ஆதார் எண்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஐடிஏஐ சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்கள் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு மூலம் அரசின் மானியங்கள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் நேரடியாக பெறமுடியும். மேலும் உண்மை யான பயனாளியை அடையாளம் காண் பது அரசுக்கு எளிதாக இருக்கும்.
சமையல் எரிவாயு மானியம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வரை 7.94 கோடி பரிவர்த்தனைகள் ஆதார் எண் வங்கிக் கணக்கு மூலம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.5,151.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள வர்கள் எண்ணிக்கை கடந்த 12-ம் தேதி 72 கோடியை கடந்துள்ளது.
ஆதார் எண் வங்கிக் கணக்கை நாட்டின் எந்தப் பகுதிக்கும், எந்த வங்கிக்கும் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். ஆதார் எண் அடிப்படையிலான வங்கிக் கணக்கில் 333 வங்கிகள் இணைந்துள்ளன.
பொதுமக்கள் ஆதார் அட்டை நகலை தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் கொடுத்து இணைப்பு பெறமுடியும். தங்கள் மொபைல் போனில் இருந்து *99*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து இணைப்பு தொடர்பான தற்போதையை நிலவரத்தை அறிய முடியும்.