40 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்த எல்.என்.மிஷ்ரா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்த எல்.என்.மிஷ்ரா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Updated on
1 min read

பிஹாரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிஷ்ரா உட்பட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வினோத் கோயல், “ரஞ்சன் துவிவேதி (66), சந்தோஷ் ஆனந்த் (75), சுதேவானந்த் (79), மற்றும் கோபால்ஜி (73) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்ப தாவது.

சிறை தண்டனை மட்டுமல்லாது, சந்தோஷ் ஆனந்த் மற்றும் சுதேவானந்த் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரமும், துவிவேதி மற்றும் கோபால்ஜி ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மிஷ்ரா மற்றும் 2 பேரின் வாரிசு களுக்கு பிஹார் அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் படுகாயமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1.5 லட்சமும், லேசாக காயமடைந்த 20 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டுத் தொகையை உரியவர்களுக்கு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் சிபிஐ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிஹாரின் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் கடந்த 1975-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் எல்.என்.மிஷ்ரா உட்பட 3 பேர் பலியாயினர். இந்த வழக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மேற்கண்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in