

பழங்குடியினர் நிலத்தை யாராலும் பறிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், ஷாந்தல் பர்கானா பகுதியில் உள்ள 16 தொகுதிகளில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தும்கா என்ற இடத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பேசும்போது, “பழங்குடியினரை முன்னேற்றுவதன் மூலமே நாட்டை வலுப்படுத்த முடியும். பழங்குடியினர் நிலத்தை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது. இவர்களை முன்னேறச் செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது” என்றார்.
சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம், ஷாந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றை பாஜக மாற்றப்போவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி மேலும் பேசும்போது, “பழங்குடியினருக்கென அமைச்சகம், தனி அமைச்சர், தனி பட்ஜெட் ஒதுக்கீடு ஆகியவை முந்தைய வாஜ்பாய் அரசால் தான் செய்யப்பட்டன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இது பாஜக மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியையோ, சிபுசோரன் கட்சியையோ மக்கள் பணத்தை கையாள அனுமதிக்க கூடாது. பாஜகவுக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை வழங்கி, இந்த கொள்ளையர்களை வெளியே எறியுங்கள். இங்குள்ள பெருமளவு நிலக்கரி மூலம் நாட்டையே ஒளிரச்செய்ய முடியும். ஆனால் தன்னைக் கூட ஒளிரச்செய்ய முடியாமல் இம்மாநிலம் இருளில் மூழ்கியுள்ளது.
ஷாந்தல் பர்கானா மக்கள் பிழைப்புக்காக பிற இடங்களுக்கு இடம்பெயரும் நிலை உள்ளது. உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதன்மூலம் மக்கள் இடம்பெயர்வது நின்றுவிடும். இளைஞர்கள் குடும்பத்தை விட்டு பிரியவேண்டிய நிலை ஏற்படாது.
இம்மாநிலத்தில் கடந்த 4 கட்ட தேர்தலில் அதிக அளவு மக்கள் வாக்களித்துள்ளனர். இது அடுத்தகட்ட தேர்தலிலும் தொடர வேண்டும்” என்றார்.