கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு பான்கார்டு இல்லாவிட்டால் சிக்கல்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு பான்கார்டு இல்லாவிட்டால் சிக்கல்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Updated on
1 min read

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துடன் இணைந்து வேட் பாளர்களின் சொத்து விவரப் பட்டியலை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ரூ.5 கோடிக்கும் மேல் சொத்து உள்ளதாக கணக்கு காட்டும், பான் கார்டு இல்லாத வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து விவரப் பட்டியலை வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் இணைந்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளன.

இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ள வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய நேரடி வரி வாரியம் (சி.பி.டி.டி), தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. அதோடு முந்தைய தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட ரூ. 2 கோடி கூடுதலாக இத்தேர்தலில் தாக்கல் செய்திருப்போரின் வருமான விவரங்களும் ஆய்வு செய்யப்படும்.

இது தொடர்பாக நேரடி வரி விதிப்பு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வேட்பாளர் ஒருவர் தாக்கல் செய்துள்ள சொத்து மற்றும் வருமான விவரத்தை ஆராய அவரின் பான் கார்டு எண் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, வேட்பாளர்களின் பான் எண் தொடர்பான விவரங்களை தருமாறு தேர்தல் ஆணையத்தை சி.பி.டி.டி. கேட்டுக் கொண்டுள்ளது. பான் எண்ணின் மூலம், ஒரு நபரின் முந்தைய சொத்து மற்றும் பண பரிவர்த்தனையை எளிதாக அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

இந்த புதிய முறையின்படி வேட்பாளர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கு விவரத்தையும், வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரத்தையும் ஒப்பிட்டு சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in