Published : 26 Dec 2014 08:50 AM
Last Updated : 26 Dec 2014 08:50 AM

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு புலிகள் கடத்தல் அதிகரிப்பு

மியான்மர் நாட்டின் மாங்லா நகரில் வனக் கடத்தல் மாஃபியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலை யில் அவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து பெரும்பாலான புலிகள் கடத்தப்படுவதாக ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச குழு’ (ஐயுசிஎன்) எச்சரித்துள்ளது.

அந்த அமைப்பு வனக்குற்றங்களை கண்காணிக்கும் ‘சைட்ஸ்’ (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora - CITES) உடன்படிக்கையின் கீழ் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்தியா, மியான்மர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் வனப் பொருட்கள் கள்ளச் சந்தைகளில் இந்த ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் வனக் கடத்தல் பொருட்களின் பிரபல சந்தைகளாக மியான்மர் - தாய்லாந்து எல்லையில் டாச்சிலிக் நகரம் மற்றும் சீனா எல்லையில் மாங்லா நகரம் இருக்கின்றன. இங்கெல்லாம் வனச்சட்டங்கள் அமலில் இருந்தாலும்கூட புலியின் உடல் பாகங்கள் பகிரங்கமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

டாச்சிலிக் சந்தையில் கள்ள விற் பனை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மாங்லா நகர சந்தைகளில் புலிக் குடும்ப உயிரினங்களின் கடத்தல் அதிகரித்திருப்பதாக சைட்ஸ் தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு மாங்லாவில் 6 சட்ட விரோத குழுக்கள் மட்டுமே கடத்தல் தொழிலை செய்துவந்த நிலையில் 2014-ம் ஆண்டு இந்த குழுக்களின் எண்ணிக்கை 21-ஆக பெருகியிருக்கிறது. அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் புலி, சிறுத்தை, மேகச் சிறுத்தை, சிறுத்தைப் பூனை, ஆசிய தங்கப் பூனை ஆகியவை இந்த சந்தைகள் மிகப் பரவலாக கிடைப்பதாக சைட்ஸ் தெரிவிக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை புலிகள் வசிக்கும் நாடுகளில் 1590 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை கணக்கில்கொள்ளும்போது ‘புலிகள் வசிக்கும் நாடு’களில் மொத்தமுள்ள சுமார் 3200 புலிகளில் பெரும்பான்மையாக 1700 புலிகள் இந்தியாவில் மட்டுமே வசிக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்தியாவில் இருந்து பெருமளவு புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் இந்திய வன ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் பேசும்போது, “வட இந்தியாவில் சில இடங்களில் பாரம் பரிய புலி வேட்டைக்காரர்களான பஹாரியாஸ் மற்றும் பாருதி சமூகத் தினர் புலிகளை வேட்டையாடி வருவ தாக சந்தேகிக்கிறோம். ஆனாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா வில் புலிகள் வேட்டை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது” என்றனர்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்ஜிங்கில் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக புலிகள் உடல் பாகங்கள் கடத்தல் விவகாரத்தில் சீனாவின் கடத்தல் வியாபாரிகள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்து டிராஃபிக் மற்றும் சைட்ஸ் அமைப்புகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும், இந்தியா தரப்பில் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.

160 பேர் கைது

இந்தியா உள்ளடக்கிய 13 நாடுகள் உதவியுடன் இண்டர்போல் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ஆசியா முழுவதும் கடந்த ஐந்து மாதங்களில் நடத்திய தொடர் வேட்டையில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் மற்றும் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் ‘பாவ்ஸ்’ (PAWS (Protection of Asian Wildlife Species) என்கிற பெயரில் வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், குரங்குகள், சிகப்பு பாண்டாக்கள், சிங்கங்கள், முதலைகள், 3500 கிலோ யானை தந்தம், 280 கிலோ அலங்கு தோல், காண்டாமிருக கொம்புகள் மற்றும் நான்காயிரம் கிலோ செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x