Published : 30 Dec 2014 02:40 PM
Last Updated : 30 Dec 2014 02:40 PM

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்: விஜயவாடாவில் ஓய்வூதியத்துக்காக அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி மரணம்

விஜயவாடா நகராட்சி அலுவலகத்தில் தனது ஓய்வூதியத்திற்காக அலைந்த வயதான பெண்மணி தள்ளாமையினால் நேற்று 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கொதப்பேட்டாவைச் சேர்ந்த பிள்ள லஷ்மி என்ற அந்த வயதான பெண்மணி ஓய்வூதியத்திற்கு தகுதியுடையோர் பட்டியலில் தன் பெயர் விடுபட்டதையடுத்து காரணம் கேட்டு விஜயவாடா முனிசிபல் அலுவலகம் முழுதும் அதிகாரிகளிடம் கடந்த 2 நாட்களாக அலைந்து திரிந்துள்ளார்.

ஆனால். ஒரு அதிகாரி கூட அவருக்கு நியாயமான, பொறுப்பான பதிலை அளிக்கவில்லை. இதில் பதட்டமடைந்த லஷ்மி நேற்று 3 மணியளவில் நகராட்சி அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் அருகே மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்.

ஆனால், அவர் மாரடைப்பினால் உயிரிழந்தது பிறகுதான் தெரியவந்தது. இதனையடுத்து நீதி கேட்டு முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் விஜயவாடா நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் இதே போல் கந்தம்மா என்ற பெண்மணியும் ஓய்வூதியம் பெறும் முயற்சியில் மரணமடைந்தார். மேலும், 2 ஓய்வூதிய நபர்களும் மரணமடைந்துள்ளது விஜயவாடாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வூதியத் தொகைக்காக பயங்கரக் குளிரில் அதிகாலை முதல் வயதானவர்கள் காத்திருக்கும் நிலையை அரசு கண்டு கொள்ளாது இருந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாபுராவ் குற்றம் சாட்டினார்.

உயிரிழப்பு மட்டுமல்ல, பல ஓய்வூதியக்காரர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை என்பதே இதில் வருந்தத்தக்கதாகும் என்கிறார் அவர்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி விஷ்ணு, இது பற்றி கூறும் போது, “தகுதியுடைய 8,000 நபர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைவிட மோசம், ஓய்வூதியத் தொகையைப் பெறும் நடைமுறையுடன் ஆதார் அட்டையை அதிகாரிகள் இணைப்பதே.

தபால் நிலையத்தில் விரல் ரேகை சரிபார்ப்புக்கு பிறகு ஓய்வூதியத்தைப் பெறுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இந்த நடைமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும், கடந்த சில நாட்களில் இந்த நடைமுறை காரணமாக உயிரை விட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x