

ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரமும் அதையே உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜகவுக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி பாஜக 18 தொகுதியில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மக்கள் ஜனநாயக கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 7 தொகுதியில் வெற்றி பெற்று 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
ஜம்மு காஷ்மீரில் 12-வது சட்டப்பேரவைக்காக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த 821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் முப்தி முகமது சயீது உள்ளிட்டோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுமார் 5,000 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுவருகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முன்னிலை நிலவரம் அறிவிக்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் நம்பிக்கை:
இதற்கிடையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஒமர் அப்துல்லா தோல்வி:
சோனாவர் தொகுதியில் இருந்து போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் ஒமர் அப்துல்லா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் அஷ்ரப் மிர் வெற்றி பெற்றார். இத்தகவலை ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு, புதிய எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.