Published : 05 Dec 2014 08:49 AM
Last Updated : 05 Dec 2014 08:49 AM

2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை: முதல்வர் தாக்கல்- ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்க மதிப்பீடு

தமிழக சட்டப்பேரவையில் 2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.1,751.18 கோடி நிதியை ஒதுக்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரவையில் முதல்வர் பேசியதாவது:

2014-15-ம் ஆண்டுக்கான 2-வது துணை மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். இத்துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.1,751.18 கோடி ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

பிற நிதி உதவிகளுடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு தேவைப்படும் நடைமுறை மூலதனத்துக்கு வழிவகை முன்பணமாக அரசு ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் நிதி உதவியுடன் 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் முதலான வசதிகள் வழங்குவதற்காக அரசு ரூ.247.75 கோடி நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள புதிய அரசு பல்தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.28.51 கோடி அனுமதித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி பிணை வைக்கப்பட்டுள்ள 544 வாகனங்களை விடுவிக்க, 6 மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக அரசு ரூ.39.73 கோடி அனுமதித்துள்ளது. அங்கன்வாடி மையம் ஒன்றுக்கு ஒரு லட்சம் மதிப்பில் 5,565 மையங்களை மாதிரி அங்கன்வாடி மையங்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ரூ.55.65 கோடி அனுமதித்துள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகரின் 4 வடிநிலங்களில் உள்ள பெரிய வடிகால்களை மேம்படுத்துவதற்கு அரசு கூடுதலாக ரூ.66.83 கோடி ஒப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்குவதற்காக, ரூ.12 கோடி அளவில் விலை கட்டுப்பாட்டு நிதியை அரசு உருவாக்கியுள்ளது. அரசின் பங்களிப்பு ரூ.8 கோடி அனுமதித்துள்ளது.

சென்னை அரசு மைய அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் சேதமுற்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.21.59 கோடி அனுமதித்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x