

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய நகரங்களில் உள்ள பிரபல துணிக் கடைகளில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான துணிகள், நகைகள் கருகின.
திருப்பதி தீர்த்தகட்டு வீதியில் சந்தனா ரமேஷ் எனும் பிரபல துணிக்கடை உள்ளது. 6 அடுக்கு மாடி கொண்ட இந்தக் கடையின் கீழ் தளத்தில் நகைக்கடையும் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நெருங்குவதால் கோடிக்கணக்கான மதிப்பிலான புதிய ரக துணிகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் வழக்கம்போல் கடை அடைக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே கடையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பாதுகாவலர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்ற வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 மாடிகளில் இருந்த துணிகளும், கீழ் தளத்தில் இருந்த நகைகளும் முற்றிலுமாக தீக்கிரையானது. இதனால் ரூ.10 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்க கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து திருப்பதி போலீஸார் விசாரனை நடத்தியதில் மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதேபோன்று நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தி நகரி வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகின. தகவல் அறிந்ததும் தீயனைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.