Last Updated : 01 Feb, 2014 06:13 PM

 

Published : 01 Feb 2014 06:13 PM
Last Updated : 01 Feb 2014 06:13 PM

ஆட்சியைப் பிடிக்க விஷ விதை தூவுகிறது பாஜக: கர்நாடக பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

ஆட்சியை கைப்பற்றுவதற்காக விஷ விதையை தூவும் மதச்சார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கையில்லாதவர்களை மக்கள் வெற்றி பெற விட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.



கர்நாடக மாநிலம் குல்பர்காவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரூ.1,218 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன இ.எஸ்.ஐ மருத்துவமனையை சனிக்கிழமை திறந்து வைத்தார். 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையுடன் செவிலியர் பயிற்சி கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் பின், குல்பர்கா எம்.வி. மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: "மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையில்லாத, விஷ விதையை விதைப்பவர்களை வெற்றி பெற விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர்கள் பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதுடன், வன்முறையை தூண்டி ஆதாயம் அடைய விரும்புகின்றனர்.

எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இருக்கும் எதிர்க்கட்சியிடம் மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். தன்னைப் பற்றி பெருமை யடித்துக் கொள்கிறவர்கள் (மோடி) நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத் துக்கு ஆசைப் பட்டதில்லை. வறுமையை ஒழிக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்த்து, அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்.

நான் என்றைக்குமே அதிகாரத்தை விரும்பியதில்லை. ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் துள்ளேன்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பணியாற்றி சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கந்நாடகத்தில் முந்தைய பாஜக அரசின் ஊழலால், மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

இப்போதைய காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மிகவும் பின்தங்கிய குல்பர்கா உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹைதராபாத் கர்நாடகம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தியுள்ளோம். பிதார், குல்பர்கா, யாட்கிர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் சோனியா காந்தி.

பாஜக பதிலடி...

சோனியாவின் பேச்சு தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், "2007-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடியை ‘மரண வியாபாரி’ என்று சோனியா குறிப்பிட்டார். ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு அதே நிலையே ஏற்படும்" என்றார்.

நிலகேனிக்கு எதிராக காங்கிரஸார்...

குல்பர்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதார் அட்டை திட்ட இயக்குநர் நந்தன் நிலகேனி காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சோனியா முன்னிலையில் இணைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இணையவில்லை. அதற்கு காரணம் அக்கட்சியை சேர்ந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பிரமுகர்கள், நிலகேனிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x