ராஜஸ்தான் அமைச்சர்கள் 16 பேருக்கு இ-மெயிலில் மிரட்டல்

ராஜஸ்தான் அமைச்சர்கள் 16 பேருக்கு இ-மெயிலில் மிரட்டல்
Updated on
1 min read

ராஜஸ்தானில் குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று அம்மாநில அமைச்சர்கள் 16 பேரின் அதிகாரபூர்வ இ-மெயில்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சார்பில் அனுப்பபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த இ-மெயிலில், வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-மெயில் ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா உள்ளிட்ட 16 அமைச்சர்களின் இ-மெயில்களுக்கு கடந்த 22-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல் துறை ஆணையர் ஓமேந்திர பரத்வாஜ், "அமைச்சர்களுக்கு வந்திருக்கும் இ-மெயில் மிரட்டல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். அதில், 'நாங்கள் என்ன செய்வோம் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எச்சரிக்கையைத் தவிர அதில் வேறு எந்தக் குறிப்புகளும் நமக்கு கிடைக்கவில்லை.

உளவுத்துறையிடமும் நாங்கள் இது குறித்த தகவல்கள் சிலவற்றை பெற்றுள்ளோம். அதன்படி நாங்கள் அனைத்து வகையிலும் விழிப்புடன் இருக்கிறோம். மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்" என்றார்.

இதனிடையே, இந்த இ-மெயில் மிரட்டல் குறித்து அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமை போலீஸார் அலோக் திரிபாதி கூறும்போது, "இதுகுறித்த விவரத்தை உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா அறிவார். நாங்கள் அனைத்து விதத்திலும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மாநிலம் முழுவதும் தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தவிர வேறு எந்த தகவல்களையும் கூற முடியாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in