

நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி, நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 2001-ம் ஆண்டு ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது தியாகம் நம் நினைவுகளில் நீங்காமல் நிற்கிறது" என தெரிவித்துள்ளார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர், தீவிரவாதிகள் ஐவர் உள்பட 14 பேர் பலியாகினர்.