

மக்களவைக்கான ஐந்தாம் கட்ட தேர்தலில், 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
கர்நாடகா (28), ராஜஸ்தான் (20), மகாராஷ்டிரா (19), உத்தரப் பிரதேசம் (11), ஒடிசா (11), மத்தியப் பிரதேசம் (10), பிஹார் (7), ஜார்க்கண்ட் (6), மேற்கு வங்கம் (4), சத்தீஸ்கர் (3), ஜம்மு-காஷ்மீர் (1), மணிப்பூர் (1) ஆகிய 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
121 தொகுதிகளில் மொத்தம் 1769 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவ கவுடா, தேசிய அடையாள அட்டை முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில் கோவா, மணிப்பூர் மற்றும் ஒடிசாவில் இந்தக் கட்டத்துடன் தேர்தல் முடிவடைகிறது. மொத்தம் 9 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 5-வது கட்டத்தில்தான் அதிக அளவு தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஒடிசாவில் 2-வது மற்றும் இறுதிக் கட்டமாக மாநில சட்டப் பேரவை தேர்தலும் இத்துடன் முடிகிறது. கர்நாடகாவின் 28 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.