

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொய்யான தேர்தல் வாக்குறுதியால் ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார்.
விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு தேர்தல் வாக்குறுதியின்படி வங்கிக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது: ஆந்திர மாநில பிரிவினைக்கு முதல் கையெழுத்து போட்டது தெலுங்கு தேசம் கட்சிதான். மாநிலத்தை பிரித்த பின்னர் தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களுக்கும் இருவகையான தேர்தல் அறிக்கைகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். இதில் ஆந்திராவில் ஆட்சி அமைத்ததும் விவசாய வங்கி கடன், மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் முழுவதையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் வீட்டில் ஒருவருக்கு வேலை என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது ஆட்சியைப் பிடித்த பின்னர் மக்களை ஏமாற்றி வருகிறார்.
விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் மொத்தம் ரூ. 1.1 லட்சம் கோடி உள்ளது. இதில் வெறும் ரூ. 5 ஆயிரம் கோடியை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்து ஏமாற்றியுள்ளார். வங்கிக் கடன் தள்ளுபடி 6 மாதம் தாமதித்ததால் 14 சதவீதம் அபராத வட்டி அதிகரித்துள்ளது. இதனை செலுத்த முடியாமல் இதுவரை ஆந்திர மாநிலத்தில் 86 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உடனடியாக விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் வரும் ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் நான் விசாகப்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.