Last Updated : 02 Dec, 2014 03:48 PM

 

Published : 02 Dec 2014 03:48 PM
Last Updated : 02 Dec 2014 03:48 PM

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அணியுடன் இணைகிறார் தோனி: யார் கேப்டன்?

இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைகிறார்.

அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிச.9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன் கேப்டன் தோனி அணியினருடன் இணைகிறார்.

பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இப்போது டிச.9-ஆம் தேதிக்கு 2-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. தோனியும் அணியினருடன் இணைகிறார். இதனால் விராட் கோலிக்கு கிடைத்த கேப்டன்சி வாய்ப்பு பறிபோகும் என்றே தெரிகிறது.

புதிய பயண அட்டவணையின் படி டிச.9-ஆம் தேதி முதல் டெஸ்ட். டிச.17-22 ஆகிய தேதிகளில் பிரிஸ்பனில் 2-வது டெஸ்ட் நடைபெறும், டிசம்பர் 26ஆம் தேதி வழக்கம் போல் மெல்பர்னில் பாக்சிங் டே டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 6-ஆம் தேதி 4-வது டெஸ்ட் நடைபெறுகிறது.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியினர் தங்களது 2-வது பயிற்சி ஆட்டத்தை டிச.4ஆம் தேதி விளையாடுகின்றனர். இந்த பயிற்சி ஆட்டத்திற்கு தோனி வரமாட்டார். அதன் பிறகு ஆஸ்திரேலியா வருகிறார். எப்படியும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அணியினருடன் இணைவதால் தோனியே கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா..

மாக்ஸ்வில் என்ற ஊரில் நாளை நடைபெறும் மறைந்த பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா, முரளி விஜய், அணி இயக்குநர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர், அணி மேலாளர் அர்ஷத் அயூப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை ஆஸ்திரேலிய நேரப்படி மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, இதனை அனைத்து முக்கியச் சானல்களும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பும் ஆஸ்திரேலிய அணியினர் வியாழனன்று அடிலெய்டில் பயிற்சியை தொடங்குகின்றனர்.

இதற்கிடையே, பிலிப் ஹியூஸ் மரணத்தின் துக்கத்தைத் தாங்க முடியாத எந்த வீரரும் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகிக்கொள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x