Last Updated : 10 Dec, 2014 10:37 AM

 

Published : 10 Dec 2014 10:37 AM
Last Updated : 10 Dec 2014 10:37 AM

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு: ஜம்மு-காஷ்மீரில் 58%; ஜார்க்கண்டில் 61%

ஜம்மு-காஷ்மீரில் 16 தொகுதிகள், ஜார்க்கண்டில் 17 தொகுதிகளில் நேற்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் காஷ்மீரில் 58 சதவீத வாக்குகளும் ஜார்க்கண்டில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங் களில் ஐந்து கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நவம்பர் 25, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.

காஷ்மீரில் 16 தொகுதிகள்

காஷ்மீர் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 87 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றுள்ளது. மூன்றாம் கட்டமாக 16 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடை பெற்றது. கடும் குளிரையும் பொருட் படுத்தாது வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர்.

பட்காம் மாவட்டம் பீர்வாஹ் தொகுதியில் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவர் உட்பட மொத்தம் 144 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரண மாக 500 கம்பெனி துணை ராணுவ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

பலத்த பாதுகாப்பு காரணமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நில வரப்படி 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி வித்தன.

மூன்றாம் கட்ட தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடந்த 5-ம்தேதி பாகிஸ்தான் தீவிர வாதிகள் 4 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத் திருந்தனர்.

அதையெல்லாம் மீறி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு கள் பதிவாகின.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 இடங்களில் இதுவரை 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மூன்றாம் கட்டமாக நேற்று 17 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் 289 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, சபாநாயகர் சி.பி.சிங், அமைச்சர் அன்னபூர்ணா தேவி உள்ளிட்டோர் முக்கிய வேட் பாளர்கள் ஆவர்.

மாவோயிஸ்டுகள் தாக்குதல்

வாக்குப் பதிவு நடைபெற்ற தான்வர் தொகுதிக்கு உட்பட்ட கெண்டா பஹாரி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து மாவோயிஸ்டுகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். காலை 6 மணி அளவில் நடைபெற்ற இந்தச் சண்டை 15 நிமிடங்கள் நீடித்தது. பாதுகாப்பு படையினரின் பதிலடியை தாக்குப் பிடிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பியோடினர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட வில்லை.

எம்.எல்.ஏ. கைது

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்எல்ஏ அரவிந்த் குமார் , இசாகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது சேரைகேலா என்ற இடத்தில் எம்எல்ஏ தரப்பினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக எம்எல்ஏ அரவிந்த் குமார் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதர இடங்களில் வாக்குப் பதிவு அமைதியாக நடை பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x