

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று முதன்முறையாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
கேரள காவல் துறையின் ‘தண்டர்போல்ட்’ அதிரடிப்படைப் பிரிவினர், வயநாடு மாவட்டம் வெல்லமுண்டா கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்டுகள் 3 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீஸார் 10 சுற்றுகள் சுட்டனர். இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நேரடி மோதல் இதுவரை நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, “தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடி போலீஸார் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீஸார் தக்க பதிலடி கொடுத்தனர். பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை” என்றார்.