சோனியா-இமாம் சந்திப்பு: புகாருக்கு பின் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு

சோனியா-இமாம் சந்திப்பு: புகாருக்கு பின் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு
Updated on
1 min read

ஷாகி இமாமுடன் சோனியா காந்தி சந்தித்து பேசியது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏப்ரல் 1 ஆம் தேதி ஷாகி இமாமை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து பேசிய சயீத் அகமது, மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்று சோனியா காந்தி தன்னிடம் கூறியதாக கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் வரும்பட்சத்தின், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் சம்பத்.

முன்னதாக, ஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது தலைமையிலான முஸ்லிம் அமைப்பின் குழுவினரை சோனியா காந்தி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சயீத் அகமது, மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்று சோனியா காந்தி தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு மக்களிடையே மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதன் தொடர்ச்சியாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சோனியா மீது புகார் அளிக்கப்போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மதரீதியாக சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளது தெரிகிறது. இதுதான் காங்கிரஸின் மதச்சார்பின்மையா? காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்துவது இதன் மூலம் தெளிவாகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகரும் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in