வெடிகுண்டு மிரட்டலால் ஜம்மு-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 4.30 மணி நேரம் தாமதம்

வெடிகுண்டு மிரட்டலால் ஜம்மு-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 4.30 மணி நேரம் தாமதம்
Updated on
1 min read

ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் டி.ஐ.பி அளித்த தகவலின் அடிப்படையில், அந்த ரயில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ரயில் 4.30 மணி நேரம் தாமதமாக டெல்லி சென்றடைந்தது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு 9.18 மணியளவில் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது, பஞ்சாப் போலீஸாரை தொடர்பு கொண்ட ஜம்மு-காஷ்மீர் போலீஸார், ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினர்.

இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் 150 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராணுவத்தினரும் தேடுதல் வேட்டையில் இணைந்து கொண்டனர். ஆனால், ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை.

தீவிர சோதனைக்குப் பின்னர் ரயில் 4 மணி நேரம் 34 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. டெல்லி ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு சென்றடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in