

பிஹார் மாநிலம் கம்ஹு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில்பாதை பராமரிப்புப் பணியின்போது போது அந்த வழியாக வந்த ரயில் மோதி ஆய்வாளர் உட்பட ஐந்து ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் ஆய்வாளர் நாது பிரசாத் மற்றும் இதர நான்கு ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அஜ்மீர் சியல்டா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே அதிகாரிகள், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதிக பனி காரணமாக ரயில் வருவது அவர்களுக்கு சரியாகப் புலப்படாமல் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். இந்த ரயில் 6 மணி நேரம் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.